Screen Reader Access Login

தனியார் முதலீட்டுத் துறைமுகங்கள்

தனியார் முதலீட்டுத் துறைமுகங்கள்:

தனியார் முதலீட்டுத் துறைமுகங்கள் துறைமுக வசதிகள் தேவைப்படும் தொழில்களை நிறுவும் நிறுவனங்களால் மேம்படுத்தப்படுகின்றன. இந்த துறைமுகங்கள் கட்டுதல், சொந்தமாக்குதல் மற்றும் இயக்குதல் (BOO) என்ற அமைப்பின் அடிப்படையில் செயல்படுகின்றன. துறைமுக வசதிகள் தேவைப்படும் நிறுவனங்கள், தனியார் முதலீட்டுத் துறைமுகங்கள் நிறுவுவதற்கு கொள்கை அளவிலான ஒப்புதல் கோரி தமிழ்நாடு கடல்சார் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் விவரங்கள், துறைமுகம் சார்ந்த தொழிற்சாலையை நிறுவுவதற்கு அரசு/சட்டபூர்வ அதிகார அமைப்புகளிடமிருந்து ஏதேனும் அனுமதி பெற்றிருப்பின் அவற்றின் விவரங்கள், துறைமுக பயன்பாடு சரியென நிறுவுவதற்கான ஆதாரங்கள், நிறுவனத்தின் துறை ரீதியபன அனுபவம், கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுவனத்தின் நிதி செயல்திறன், துறைமுகம் அமைக்க சாத்தியமான இடம், துறைமுகத்தின் பயன்பாடுகள் குறித்த கருத்துரு மற்றும் உத்தேசிப்பப்பட்டுள்ள முதலீடு பற்றிய விவரங்கள் ஆகியவை விண்ணப்பத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

கொள்கையளவில் ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், நிறுவனம் 120 நாட்களுக்குள் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக் கூராய்வு அறிக்கையை தயாரிக்க வேண்டும். அவ்வறிக்கையில் நீர்பபரப்பியல் ஆய்வு மற்றும் அறிக்கை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி சுற்றுச்சூழல் அம்சங்கள், அருகிலுள்ள நீர்நிலைகள், கழிமுகங்கள், புராதனப் பகுதிகள் அல்லது தொல்லியல் தளங்கள், சுற்றுக்சூழல் உணர்திறன் பகுதிகள், கலங்கரை விளக்கம், துறைமுக எல்லைகளை அடையாளம் காணுதல், துறைமுக எல்லைக்குள் அமைந்துள்ள கடலோர வாழ்விடத்தை அடையாளம் காணுதல், உத்தேசிக்கப்பட்டுள்ள துறைமுக கட்டமைப்பு வசதிகளுக்கான வடிவமைப்புகள், நீர்முகப்புப் பகுதியின் தேவையினை நிரூபிப்பதற்காக ஆதாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக் கூராய்வு அறிக்கையின் மீது வாரியம் ஆய்வு செய்து, அதன் ஒப்புதலுக்கு பிறகு துறைமுக எல்லைகளை அறிவிக்கக் கோரி கருத்துருவினை அரசுக்கு அனுப்பும்.


துறைமுகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின், துறைமுக எல்லைகளுக்குள் அமைந்துள்ள கடற்கரையோரமுள்ள அரசு நிலம் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படும். பின்னர் அந்த பகுதியின் தன்மை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும். விரிவான திட்ட அறிக்கையில் நில ஆய்வு, மண் ஆய்வு, நில அதிர்வு தாக்க, ஆய்வு கடல் மட்ட ஆய்வு, கடற்படுகை ஆய்வு, சிறுகலன்களின் இயக்கம் குறித்த சாத்தியக்கூறு அறிக்கை, அலைகளின் தன்மை குறித்த ஆய்வு, கடற்கரையோர மதிப்பீடு, தூர்வாருதல் தூர்வாரப்பட்ட பொருட்கள் அப்புறப்படுத்தும் முறை, கடல்நீர் உள்ளிழுப்பு மற்றும் வெளியேற்று கட்டமைப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் மேலாண்மை திட்டம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல், அலைதடுப்பி வடிவமைப்பு, கால்வார் வடிவமைப்பு, தோராய திட்ட மதிப்பீடு ஆகிய விவரங்கள் இடம் பெற வேண்டும். 


துறைமுக எல்லைகள் வரையறுக்கப்பட்ட ஓராண்டுகள் நிறுவனம் தேவையான நிதியினைத் திரட்ட வேண்டும. விரிவான திட்ட அறிக்கைக்கு வாரியம் ஒப்புதல் அளித்த மூன்று மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் மற்றும் மூன்று ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.